வரத்துவாரிகள் சீரமைக்காததால் கன மழை பெய்தும் நிரம்பாத பசுங்காயமங்கலம் ஏரி

மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது

Update: 2021-11-17 01:15 GMT

கனமழை பெய்து பல்வேறு நீர்நிலைகள் நிரம்பியுள்ளபோதும் கள்ளக்குறிச்சி நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் நீர் வரத்தில்லாமல் வறண்டு கிடக்கிறது.

மாவட்டத்தில் பருவ மழைக் காலங்களில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பும்போது ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அப்போது, ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும்.ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது மட்டுமே, பெரும்பாலான ஏரிகள் நிரம்புகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையில், கோமுகி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், தென்கீரனுார், ஏமப்பேர், கள்ளக்குறிச்சி பெரிய ஏரி, தச்சூர் உட்பட பல ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளிேயறி வருகிறது.

ஆனால், நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. ஏரியில் மண் எடுத்த பள்ளங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி நிற்கிறது. கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 65 ஏக்கர் பரப்பளவில் பசுங்காயமங்கலம் ஏரி அமைந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது மட்டிகைக்குறிச்சி அருகே உள்ள மதகு மூலம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் 3 கி.மீ. தொலைவிற்கு கால்வாய் உள்ளது.

ஏரி பாசனத்தை நம்பி 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், இந்த ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால், முறையான பராமரிப்பின்றி கருவேலம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. மேலும், பல இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் வாய்க்கால் சிக்கியுள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கு நீர் வரத்தின்றி இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், அப்பகுதியில் விளை நிலம் வைத்துள்ளவர்கள் ஏரி பகுதியை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து பயிர் செய்யத் துவங்கி விட்டனர். 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, தற்போது 20 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர், ராஜாஜி, நகர், எம்.ஜி.ஆர்.நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகள் பசுங்காயமங்கலம் ஏரியையொட்டி உள்ளது. இந்த ஏரியில் முழு கொள்ளளவு நீர் நிரம்பினால், கோடைகாலத்தில் குடியிருப்புகளுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஏதுவாக அமையும். ஏரியின் நீர் வரத்து வாய்க்காலை சீரமைத்து, தண்ணீர் நிரம்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால்,  பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையில், மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய சூழ்நிலையில், பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் வழக்கம்போல் நீர் வரத்து இன்றி, வறண்டு காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.எனவே, ஏரியின் நீர் வரத்து வாய்க்கால் சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற  மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News