கச்சராபாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கச்சராபாளையம் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதித்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-10-16 11:04 GMT

தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பயறு வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர் .இதில் 40 சதவீதம் அளவிற்கு நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோமுகி, மணிமுக்தா அணைகள், ஏரிகள் மற்றும் கிணற்று பாசனங்கள் மூலம் சம்பா, நவரை, கார் ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.சம்பா சாகுபடியில் நீண்ட நாட்கள் வளர்ச்சி கொண்ட பொன்னி, பி.பி.டி., போன்ற ரகங்களை சாகுபடி செய்கின்றனர். நவரை மற்றும் கார் பருவங்களில் 90 நாட்களில் வளர்ச்சி அடையும் குறுவை வகை நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர்.

கச்சிராயபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது முழு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன்மலை பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக நிலங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதுடன் நெல் மணிகள் முளைக்கவும் துவங்கியுள்ளது. வயல்களில் நீர் நிரம்பியுள்ளதால் வழக்கமாக குறைந்த செலவில் அறுவடை செய்யும் பெரிய ரக நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

தற்போது கூடுதல் செலவாகும் சிறிய வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமே அறுவடை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அறுவடை பணிக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விலை உயர்வு, உர தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்களை தற்போது அறுவடை செய்யமுடியாமல் திணறி வருகின்றனர். மேலும் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களும் வீணாகும் நிலை உருவாகியுள்ளதால் கால்நடைகளுக்கும் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நெற் பயிர்களின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை செலவினங்களும் இரட்டிப்பாகியுள்ளதால் பலரு க்கு சாகுபடி மற்றும் அறுவடை செலவிற்கே மகசூல் ஈடாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சிராயபாளையம் பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News