கள்ளக்குறிச்சியில் கவுன்சிலர்களாக தேர்வானவர்கள் குஷி: சகல வசதிகளுடன் கவனிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து சென்று குஷியில் ஆழ்த்தி வருகின்றனர்.

Update: 2021-10-16 12:57 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்., - ம.தி.மு.க., - மா.கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்பட்டு போட்டியிட்டது. பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ஜ., தனித்து போட்டியிட்டது.

ஆளும் கட்சியான தி.மு.க.,வில் ஏராளமானோர் 'சீட்' கேட்டு போட்டியிட்டனர். போட்டியிட 'சீட்' கிடைக்காத விரக்தியில் ஒரு சிலர் சுயேச்சையாகவும் களம் கண்டனர். தேர்தல் முடிவில், மாவட்டத்தில் 9 ஒன்றியங்களிலும், பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்று, சேர்மன் பதவியை தக்க வைத்துக் கொண்டது.

அதேபோல், 19 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளையும் தி.மு.க., பிடித்தது.இதில், ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிப்பதற்கு ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக சேர்மன் பதவிக்கு போட்டியிடுபவர்கள், வெற்றி பெற்ற கவுன்சிலர்களை ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று ரகசியமாக தங்க வைத்து குஷிப்படுத்தி வருகின்றனர்.

வரும் 20ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு அந்தந்த அலுவலகங்களில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News