கள்ளக்குறிச்சி: பயிர்கள் நீரில் மூழ்கியதால் கவலையில் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் இழப்பீடு கிடைக்குமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

Update: 2021-11-17 10:24 GMT

கல்வராயன் மலைப்பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு மரவள்ளி, மக்காச்சோளம், கேழ்வரகு, நெல், கரும்பு, பருத்தி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

கல்வராயன்மலை பகுதியில் 3,330 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், 112 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, 150 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, 2,250 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து வெள்ளிமலை, உப்பூர், வாரம், கெண்டிக்கல், வாழப்பாடி, முண்டியூர், மணியார்பாளையம், அருவங்காடு, சேராப்பட்டு உட்பட பல்வேறு கிராமங்களில் 113 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், 63 ஏக்கர் கரும்பு, 225 ஏக்கர் மக்காச்சோளம் என 401 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.குறிப்பாக நெற்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளதால் நெல் மணிகள் தற்போது முளைக்கத் துவங்கியுள்ளன.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News