கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர்கள் கடும் அதிருப்தி

கள்ளக்குறிச்சியில் அதிமுகவினர் ஆர்வம் காட்டாததால் வேட்பாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Update: 2022-02-10 15:44 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் யாரும் ஆலோசனை வழங்குவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து கொடுக்கவும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. ஆளுங்கட்சி என்ற பலத்துடன் தி.மு.க.,வினர் செலவில் தாராளம் காட்டி அதிரடியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதவி பெற்ற ஒன்றிய சேர்மன்கள், துணைச்சேர்மன்கள், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளில் தேர்தல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் சொந்த பணத்தை தாராளமாக செலவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொய்வின்றி நடத்தி செல்கின்றனர். இதற்கிடையே அமைச்சர் வேலு வார்டு வாரியாக நேரடி ஆய்வு செய்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மாவட்ட பொறுப்பாளர்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெற்றே வேண்டும் என்கின்ற முனைப்பில் தேர்தல் பொறுப்பாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.

இதற்கு எதிர்மாறாக அ.தி.மு.க.,வில் வெற்றிக்கான முறையான திட்டமிடலும், முக்கியத் தலைவரின் வழிகாட்டுதலும் இன்றி தொய்வடைந்த நிலையில் உள்ளது. அந்தந்த பகுதி நகர செயலாளர் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தை செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வேட்பாளர்களை உற்சாகப்படுத்தி முறையாக வழி நடத்தாததால், வடக்கனந்தல் பேரூராட்சியில் 5 வேட்பாளர்களும், சங்கராபுரம் பேரூராட்சியில் 3, தியாகதுருகம் பேரூராட்சி, உளுந்துார்பேட்டை நகராட்சியில் தலா ஒருவரும் என மொத்தம் 10 அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதற்கு முன்னதாக வடக்கநந்தல் பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள், சங்கராபுரம் பேரூராட்சியில் ஒரு வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதில் பல வார்டுகளில் அ.தி.மு.க., வின் மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் கட்சித் தலைமை முறையாக திட்டமிடலும், ஆலோசனையும் வழங்கவில்லை என்பதை இது எதிரொலிப்பதாக உள்ளது.

குறிப்பாக தேர்தல் செலவுக்கு வேட்பாளருக்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என்பது நிர்வாகிகளின் புலம்பலாக உள்ளது. இது ஆளும் கட்சியான தி.மு.க.,விற்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News