சங்கராபுரம் பட்டாசு கடையில் தீ விபத்து 6 பேர் உடல் கருகி பலி: 30 பேர் படுகாயம்

அமைச்சர் எ.வ. வேலு சம்பவ இடத்தை பார்வையிட்டு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மருத்துவமனைகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்

Update: 2021-10-27 12:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மின்கசிவால் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கடைகள் தரைமட்டமாயின. விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகியும் இறந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணபதி. இவர், கடைவீதியில் 'முருகன் சூப்பர் மார்க்கெட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையொட்டி விற்பனை செய்ய பட்டாசுகளை மொத்தமாக வரவழைத்து, கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.நேற்று மாலை 6:30 மணியளவில் மின்கசிவு காரணமாக பட்டாசு குடோன் தீ பிடித்து எரியத் துவங்கியது.

குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அருகில் இருந்த 'அய்யங்கார் பேக்கரி, ரெடிமேடு' துணி கடைகளில் தொடர்ச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடையிலிருந்து ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.அப்போது, பேக்கரி கடையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியது.

இதனால், அருகில் இருந்த கடைகள் இடிந்து தரைமட்டமாகின.தகவலறிந்த, சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மின்சாரம் தடைபட்டதாலும், சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்ததாலும் தீயை உடனடியாக அணைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்ததால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த விபத்தில், சங்கராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த காலித், 22, சையது ஆலம், 24, ஷேக் பஷீர், 40 சையது அலி, 22, எஸ்.வி.பாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யாசாமி, 70 மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தீயில் கருகி இறந்தனர். 30க்கும் மேற்பட்டார் படுகாயடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி, இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக், சென்று தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு கடை உரிமையாளரான செல்வகணபதியின் பெயரில் உள்ள பட்டாசு விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என தெரிந்தது.நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு சம்பவ இடத்தை பார்வையிட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்புசங்கராபுரம் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் எனவும்  முதல்வர்  அறிவித்துள்ளார். பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags:    

Similar News