போலீஸ் - பேருந்து நடத்துனர் மோதல் எதிரொலி: ஈரோட்டில் பேருந்துகளுக்கு வளைத்து வளைத்து அபராதம்

போலீஸ் - பேருந்து நடத்துனர் மோதிக் கொண்டதையடுத்து, ஈரோட்டில் வீதிமுறல்களை சுட்டிக்காட்டி அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர்.

Update: 2024-05-25 01:17 GMT

மேட்டூர் சாலை வழியாக ஸ்வஸ்திக் கார்னர் வந்த அரசு பேருந்துக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்.

போலீஸ் - பேருந்து நடத்துனர் மோதிக் கொண்டதையடுத்து, ஈரோட்டில் வீதிமுறல்களை சுட்டிக்காட்டி அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் டிக்கெட் எடுக்க மறுக்க, வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என நடத்துனர் கூற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியது.


தொடர்ந்து, வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தது. இதனால் கடுப்பான போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், அரசு பேருந்துகளை தவறான முறையில் இயக்கினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகரின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான மேட்டூர் சாலையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும், இந்த வழியாக பேருந்துகள் ஸ்வஸ்திக் கார்னர் வழியாக பேருந்து நிலையம் சென்று வந்தன. 

இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் எதிரொலி காரணமாக, நேற்று வடக்கு போக்குவரத்து போலீசார் அவ்வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். குறிப்பாக அந்த சாலையில் சென்ற அரசு பேருந்துகளை வளைத்து வளைத்து தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதனிடையில், அந்த வழியே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் தலைக்கவசம் அணியாமல் பயணித்தனர். அவர்களை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்தனர்‌. இதனால், அரசுப் பேுருந்துகளை மட்டும் நிறுத்தி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, போக்குவரத்து போலீசார், அரசுப் பேருந்துகளை குறிவைக்கின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Tags:    

Similar News