சத்தி அருகே வனவிலங்கு வேட்டைக்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கல்: இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட அவுட்காய் எனப்படும் நாட்டுவெடிகுண்டுகளை பதுக்கிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 அவுட்காய்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-25 04:45 GMT

கைது செய்யப்பட்ட இருவரையும் படத்தில் காணலாம். உள்படம்:- பறிமுதல் செய்யப்பட்ட அவுட்காய் எனப்படும் நாட்டுவெடிகுண்டுகள்.

 சத்தி அருகே வனவிலங்குகளை வேட்டையாட அவுட்காய் எனப்படும் நாட்டுவெடிகுண்டுகளை பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மேனகா தலைமையில், தலைமைக்காவலர்கள் சரவணன், சக்திவேல் ஆகியோர் புளியங்கோம்பை, காசிக்காடு, வடக்குபேட்டை ஆகிய பகுதிகளில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புளியங்கோம்பை கம்பத்ராயன் புதூரில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார், புளியங்கோம்பை கம்பத்ராயன் புதூரில் ரோந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டதும் இருவர் தப்பி ஓடினர்.

உடனே, போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த திருமன் (வயது 60) மற்றும் செந்தில் என்கிற செந்தில்குமார் (வயது 48) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

மேலும், திருமன் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்காய்கள் பதுக்கி வைத்திருந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 அவுட்காய்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News