கோபி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (25ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-25 13:45 GMT

கோபிசெட்டிபாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர்களின் படைப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோபிசெட்டிபாளையத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் மாணவ, மாணவியர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மின்சார பணியாளர் பணிமனை, குளிர்பதனம் மற்றும் தட்பவெட்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியாளர் பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, பெரிய கொடிவேரி பேரூராட்சியில், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.53 கோடி மதிப்பீட்டில், சுமார் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருவதையம் மற்றும் திறந்தவெளி கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை புதிதாக பிரதான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், ரூ.2.48 லட்சம் அரசு மானியத்துடன் கரும்பு நுண்ணீர் பாசன வயல் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, திட்டத்தின் நன்மைகள், வழங்கப்பட்ட மானியம் ஆகியவை குறித்து விவசாயி மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அட்மா திட்டத்தின் கீழ், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள காட்டுப்பன்றி விரட்டி மருந்து மற்றும் காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொகுப்பு ஆகியவற்றை 2 விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதனையடுத்து, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தாசப்பகவுண்டன்புதூரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி ஆயத்த மையம் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, தாட்கோ மூலமாக ரூ.1.75 லட்சம் மதிப்பிலான மானியத் தொகையுடன் டிஜிட்டல் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளதையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, அரசு கல்லூரி மாணவியர் விடுதியினையும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு, உறைவிட பள்ளியினையும், விடுதியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் சந்தியா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜுன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, இந்திராணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News