திண்டுக்கல்: மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வதன் மூலம் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது

Update: 2021-09-21 12:11 GMT

பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவு நீர்கால்வாயில் பணியாற்றும் திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவுபணியாளர்கள்

தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாத காரணத்தினால் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக திண்டுக்கல் மாநகராட்சி  நிர்வாகம் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரானா இரண்டாவது அலை தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்த வகையில்  உள்ளது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும்,கொரானா பரவலின் போது களத்தில் நின்று போராடிய தூய்மை பணியாளர்களை யாராலும் மறக்க இயலாது.

தற்பொழுதும் தூய்மை பணியாளர்கள் தொய்வின்றி தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீரோடைகளை தூர்வாரும் பணி நேற்று (20.09.2021)முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். மாவட்ட ஆட்சியர் விசாகன் இந்த பணிகளை நேற்று துவக்கி வைத்த போது அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் அனைவரும் கையுறை காலுறை முக கவசம் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர்.

ஆனால், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவு நீரோடைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. இங்கு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை. பணியாளர்கள் அனைவரும் வெறும் காலில் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுத்தம் செய்து வருகின்றனர்.

அதேபோல், பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளும் மிகவும் தரமற்றதாக உள்ளது. இன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் கற்கள் இருந்ததாக வேதனை தெரிவித்தனர். பெருந்தொற்று உள்ளிட்ட அனைத்து இக்கட்டான காலங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதார பணியாளர்களின் நலனில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வதன் மூலம் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படும்   நிலை  மன வேதனையளிப்பதாக  சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News