எரிவாயு காலி சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து..!

புழல் பகுதியில் சிலிண்டர்களை ஏற்றி வந்த வாகனம் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-11-09 08:00 GMT

விபத்துக்குள்ளான சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் 

புழல் அருகே காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.  இதனால் சிக்னல் கம்பம் சேதமானது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை போரூரில் இருந்து மாதவரம் வழியாக காலி சிலிண்டர்களை நிரப்புவதற்காக அவற்றை ஏற்றிக்கொண்டு சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

புழல் மத்திய சிறை அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையில் சிலர் கடந்து சென்றதாகவும் அவர்கள் மீதும் மோதாமல் இருக்க ஓட்டுநர் அருண்குமார் வாகனத்தை திருப்பிய போது அருகில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மோதி, சாலையின் தடுப்புச் சுவரில் இடித்து வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்ட வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ரசாயன நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி சிலிண்டர்கள் மீது தெளித்து அசம்பாவிதம் ஏற்படாமல் முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News