கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்தவர் அரிசந்த் ஸ்ரீதர். இவர் தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் நண்பர் ஒருவருடன் தங்கி யூபர் ஆப்பில் (uber app) இணையதளத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை கொடுங்கையூரில் இருந்து மாதவரம் வழியாக மூன்று சிறுவர்களை வாடிக்கையாளர்களாக சவாரி ஏற்றிக்கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு செல்வதற்காக மாதவரம் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மாதவரம் ரவுண்டானா அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் இருந்த ஒருவன் கார் ஓட்டுனரின் கழுத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கார் ஓட்டுனரை மிரட்டத் துவங்கினான்
இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர்அரிசந்த் ஸ்ரீதர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் அந்த மூன்று பேரும் ஒன்றிணைந்து
கார் ஓட்டுநரை மிரட்டி அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 2000 மற்றும் அவருடைய ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கி மாயமாகினர். உடனே கார் ஓட்டுநர் அரிசந்த்ஸ்ரீதர் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த மாதவரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரும் சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள எழில் நகர் அருகே உள்ள குப்பை மேட்டில் குடிபோதையில் பதுங்கி இருப்பதாக மாதவரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதிக்கு விரைந்து சென்ற மாதவரம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலானதனிப்படை பிரிவு போலீசார் அங்கு குடிபோதையில் மயக்கத்தில் இருந்த மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இந்த குற்ற செயலியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்களில் ஒருவன் மாதவரம் ரவி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெர்ரி ஜோசப் (18) என்றும் மற்றொருவன் வில்சன் ஜோ (19) மூன்றாவது நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்றும் தெரிய வந்தது.
அத்துடன் இவர்கள் மீது கொடுங்கையூர், மாதவரம் பால் பண்ணை, வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் மூன்று பேரையும் கைது செய்த மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் சென்னை மாதவரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி குற்றவாளிகள் இருவரையும் புழல் சிறையிலும் சிறுவனை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.