நெல்லையில் பருவ மழை முன்னேற்பாடு : தாமிரபரணி ஆற்றில் வெள்ள மீட்பு ஒத்திகை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது எப்படி என தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.

Update: 2021-06-30 08:09 GMT

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்புத்துறையினர் வெள்ள மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர் மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரி தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் பருவ மழை நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வெள்ள மீட்பு ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நெல்லை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் இன்று வெள்ள மீட்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். அதன்படி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற இந்த வெள்ள மீட்பு ஒத்திகையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஆற்றின் நடுவே சில வீரர்களை நிற்க வைத்து வெள்ளத்தின் போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களை ரப்பர் படகு மூலம் விரைந்து சென்று மீட்பது, கயிறு கட்டி பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வருவது, போன்ற ஒத்திகைகளை செய்து காண்பித்தனர். மேலும் ஆடு மாடு போன்ற கால்நடைகளை வெள்ளத்தில் இருந்து மீட்பது குறித்தும் ஒத்திகை நடத்தினர். அதேபோல், தீயணைப்புத்துறையினர் வரும் வரை காத்திருக்காமல் காலி குடங்கள், பிளாஸ்டிக் கேன்கள் போன்ற வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை வைத்து கூட எளிதில் பொதுமக்கள் தங்களைத் தாங்களே வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் சத்திய குமார் கூறியதாவது:தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வருவாய்த்துறை தீயணைப்புத்துறை இணைந்து பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். தாழ்வான இடத்தில் உள்ளவர்கள் தாங்களே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தன்னையும் விலங்கினங்களையும் எப்படி மீட்பது என செய்து காண்பிக்கப்பட்டது. பருவமழை மாற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் எதிர்பாராத அளவுக்கு ஆபத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே எதிர்பாராத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்று செய்து காண்பிக்கப்பட்டது. பருவ மழையின் போது பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை வைத்து கூட தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.  காலி குடங்களை வைத்து கூட வெள்ளத்தில் இருந்து மிதந்து பாதுகாப்பான பகுதிக்கு வரலாம். தீயணைப்புத்துறையிடம் மீட்பு உபகரணங்கள் எப்போதுமே தயார் நிலையில் தான் உள்ளது. பேரிடர் மீட்புக் குழு மூலம் வரும் தகவலை வைத்து உடனுக்குடன் பாதிப்பு இடங்களுக்கு செல்வோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அனுப்ப வேண்டாம். மேலும் நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News