'ரசிகர்களின் சந்தோஷமே என்னுடைய இலக்கு' - நடிகர் வடிவேலு 'பளிச்'

சமீபத்தில் நடந்த ‘ப்ரமோ’ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு,‘ என் ரசிகர்கள், என்னை ரசிக்க வேண்டும். ரசிகர்களின் சந்தோஷமே என்னுடைய இலக்கு,’ எனத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-04 07:33 GMT

‘வைகைப்புயல்’ நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் 'வைகைப்புயல்' வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. இன்னும் காமெடி சேனல்களில் தினமும் இவரது நகைச்சுவை காட்சிகளே மணிக்கணக்கில் ஒளிபரப்பாகிறது. 


கடந்த பத்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடிகர் வடிவேலு இல்லாத படங்களே இல்லை எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு 'பிசி'யாக இருந்த நடிகர் வடிவேலு சில சர்ச்சைகளாலும், பல பிரச்சினைகளாலும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். மேலும், இவர் நடிப்பில் உருவான 'இம்சை அரசன்' படத்தில் இவருக்கும், தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை, வடிவேலுவுக்கு 'ரெட் கார்டு' போடும் அளவிற்கு சென்றது.

இந்நிலையில், தற்போது ஒருவழியாக பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் 'லைக்கா'வின் தயாரிப்பில் வடிவேலு, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் வடிவேலு பேசுகையில், 'என்னை, சிலர் திமிர் பிடித்தவன் என சொல்கின்றனர். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அக்கதையில் நான் நடிக்கமாட்டேன். எனவே, அந்த இயக்குனர்களின் கதையில் நான் நடிக்கவில்லை என்பதற்காக சிலர் வெளியே சென்று, இவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.


என் நகைச்சுவையை பார்த்து ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. ஆனால் சிலர் பொறாமையில் இவ்வாறு பேசி வருகின்றனர், என்கிறார் வடிவேலு.

வடிவேலு நடித்த படங்களில், அவர் நடிக்கிற கேரக்டரில் திமிர் இருந்தால், அதை நடிப்பில் அமர்க்களமாக வெளிப்படுத்தி அசத்தி விடுவார். ஆனால், பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் அதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டதாக இதுவரை எந்த புகாரும் வடிவேலு மீது யாரும் கூறியதில்லை. குற்றச்சாட்டும் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாவில், வடிவேலு பரபரப்பாக நடித்துக்கொண்டு இருந்த ஒரு காலகட்டத்தில் கேப்டன் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் அரசியல் ரீதியான கருத்து மோதல் ஏற்பட்டது. அதே போல், திமுக ஆதரவாளராக, தேர்தல் பிரசார மேடையில் பேசிய போது, சில சர்ச்சைகளில் வடிவேலு சிக்கிக்கொண்டதும் உண்மைதான். ஆனால், தொழில் ரீதியாக, ஒரு நடிகனாக அவர் எப்போதுமே, ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்க்ஸை ஆரம்பித்துள்ள வடிவேலு, தமிழ் சினிமாவில் மீண்டும் ஆரவாரமாய் ஒரு ரவுண்டு வருவார் என தாராளமாக நம்பலாம். 

Similar News