ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகப் போகும் 'இடம் பொருள் ஏவல்'..!

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன் தயாரான 'இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Update: 2022-10-22 06:26 GMT

'இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் வெளியாக இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய படம் 'இடம் பொருள் ஏவல்'. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். இப்படம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி சாகித்திய அகாடமி விருது பெற்ற கதையை அடிப்படியாகக் கொண்டு உருவான படம்.

'இடம் பொருள் ஏவல்' படத்தின் படப்பிடிப்பு, 2014-ம் ஆண்டு முழுமையாக நிறைவுபெற்றது. அத்துடன் படத்தின் பிற அனைத்து வேலைகளும் முடிவுற்று, இப்படம், 2015-ம் ஆண்டு வெளிட தயாரிப்புத் தரப்பால் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய வேறு படங்களே வெளியாகிவிட்டன. அத்துடன் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் பல்வேறு படங்களில் நடித்து அப்படங்களும் திரைக்கு வந்து பிசியான கலைஞர்களாக மாறிப்போயினர்.


இதனிடையே, தற்போது இந்தப் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டதாம். இதனால் இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று திருப்பதி பிரதர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருப்பதி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான போஸ் லிங்குசாமி, ''சினிமாவில் நீதிமன்ற வழக்கு, ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக படங்களின் வெளியீடு தாமதாவது, தடைபடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எங்கள் நிறுவன படங்கள் வெளியாகும் முன் எதிர்கொண்ட பிரச்சினைகள் அசாத்தியமான, அசாதாரணமானவையாகும்.

இதுவரையில், நாங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்ற எண்ணியதும் இல்லை. இருந்தபோதிலும், சினிமா வியாபாரங்கள், கடன் ஒப்பந்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் படிக்காமலேயே கையெழுத்திடுகிறோம். நம்பிக்கை பொய்யாகும்போது இதுபோன்ற நீதிமன்ற வழக்கு மற்றும் தடைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. 

'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் தொடர்பான வழக்கு எங்கள் நிறுவனம் எதிர்காலத்தில் அடுத்து தயாரிக்க உள்ள பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை சட்டச் சிக்கல் மற்றும் பஞ்சாயத்து இல்லாமல் தயாரித்து வெளியிடும் அனுபவத்தை எங்களுக்கு அளித்துள்ளது'' என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த நடிக நடிகையர் வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தாலும், 'இடம் பொருள் ஏவல்' படம் கடந்த ஏழு வருடங்களாக வெளியிடுவதற்கு பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் ஃபைனான்ஸ் பிரச்னைகள் காரணமாக தடைபட்டுப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News