நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு

நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு

நாமக்கல் அருகே நாய்கள் கடித்ததால் இறந்துபோன ஆடு.

நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்

நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லையால் ஆடுகள் இறக்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காதப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அழகியகவுண்டம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைவரும் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் கோழிப்பண்ணைகளும் உள்ளன.

இந்த கிராமத்திற்கு அடிக்கடி வெறிநாய்கள் வந்து ஆடுகளைக் கடித்து அட்டகாசம் செய்கிறது. நாய்கள் ஆட்டுப்பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை கடித்து துன்புறுத்துகிறது. சில நேரங்களில் ஆடுகள் இறந்துவிடுகின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அழகியகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நடேசன் (60) என்பவரது தோட்டத்தில், அமைக்கப்பட்டிருந்த பட்டியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்தது. சுமார் 5 வெறிநாய்கள் அங்கு கூட்டமாக வந்து ஆடுகளைக் கடித்தது. ஆட்டின் சத்தம் கேட்ட நடேசன் அங்கு ஓடிச்சென்று நாய்களை விரட்டியடித்தார். நாய் கடித்ததில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஆடு இறந்துவிட்டது. சுமார் 5க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் சுமார் 50 ஆண்டுகளாக ஆடுகள் வளர்த்து வருகிறோம். கடந்த 2, 3 ஆண்டுகளாக நாய்த் தொல்லை அதிகமாக உள்ளதால் ஆடுகள் வளர்க்க முடியவில்லை. நாய்கள் அடிக்கடி கூட்டமாக வந்து ஆடுகளைக் கடித்துக்கொன்றுவிடுகிறது. இதனால் ஆடு வளர்ப்போருக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை முறையாக குழிக்குள் போட்டு எரிக்காமல் திறந்த வெளியில் வீசுகின்றனர். இறந்த கோழிகளை சாப்பிடுவதற்காக அடிக்கடி ஏராளமான நாய்கள் கூட்டமாக இங்கு வருகின்றன. கோழி கிடைக்காத நேரத்தில் அந்த நாய்கள் ஆடுகளைக் கடிக்கின்றன. சில நேரங்களில் நாய்கள் மனிதர்களையும் கடிக்கின்றன.

இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆடு வளர்ப்போருக்கு உதவி செய்யும் வகையில், இப்பகுதியில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story