டிரெண்டிங்கில் இந்தியன் 2 டிரைலர்! கெட்அப்களில் கலக்கும் கமல்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.
1996ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா, பிரமிளா ஆகியோர் நடித்திருப்பர். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்த இந்த படத்தின் முடிவில் இந்தியன் தாத்தா தப்பி ஓடியதாக காட்டப்பட்டிருக்கும். இந்தியனுக்கு சாவே கிடையாது என்று ஒரு வசனத்தையும் பேசி, வெளிநாட்டுக்கு சென்றிருப்பார் இந்தியன் தாத்தா.
அந்த இடத்திலிருந்து துவங்கி கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தா திரும்பி வந்தால், என்ன ஆகும் என்பதை பேசும் படமாக இந்தியன் 2 இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 12ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய டிரைலர் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனுடன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் என பலரும் நடித்திருக்கிறார்கள். விவேக் படப்பிடிப்பின்போதே இறந்துவிட்டதால், அவருக்கு ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் ரிகிரியேட் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியன் 2 படக்குழு பல விசயங்களைப் பேசியிருந்தது. அந்த சந்திப்பில் இயக்குநர் ஷங்கருடன் உலகநாயகன் கமல்ஹாசனும் பங்கேற்றிருந்தார். அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஷங்கர், கமல்ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
விழாவில் பேசிய ஷங்கர் தெரிவித்த கருத்துக்கள் இதோ “நான் எப்போதுமே, கற்பனை ஒன்றை கலந்து இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து படமெடுப்பேன். கிட்டத்தட்ட பெரும்பான்மையான படங்களில் இதையேதான் வைத்திருப்பேன். அதன்படி, இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. முதல் பாகமாக இந்தியன் படம் தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தியன் 2 தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில், 40 நாட்கள் பிராஸ்தெட்டிக் மேக்கப் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில், சுமார் 70 நாட்கள் சிறப்பு மேக்கப் போட்டு கமல் நடித்திருக்கிறார். இந்த மேக்கப் போட்டு நடிப்பது மிகவும் சவாலான பணி. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இதற்காக செலவிட வேண்டும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வந்து, கடைசி ஆளாக வீட்டுக்குச் செல்வார் கமல். இறுதி நேரம் வரை கமல்ஹாசன் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தார்.
அதிகாலை 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்து, காலை 7 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தியாகவேண்டும். அப்படிப்பட்ட சூழலிலும் நடித்து கொடுத்தார் கமல்ஹாசன். இரவு பேக்கப் சொல்லியும் அனைவரும் சென்றாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் மேக்கப் கலைக்க கமல்ஹாசன் அமர வேண்டும். இப்படி மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்து கொடுத்தார் கமல்ஹாசன்.
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. அது கொஞ்சம் கடினமான மேக்கப். இந்த அளவுக்கு டெக்னாலஜி அப்போது இல்லை. ஆனால், இந்த படத்தில், கமல்ஹாசனின் நடிப்பை முதல் பாகத்தில் இருந்ததை விட அதிகளவில் பார்க்க முடியும். இது மிகவும் லேசான மேக்கப் போன்று இருக்கும். முக பாவனைகளை படத்தில் காட்டமுடியும்.
இந்த படத்துக்காக ஒரு காட்சியில் 4 நாட்கள் கயிற்றில் தொங்கியபடியே நடித்தார் கமல். கயிற்றில் தொங்கியபடியே இந்த காட்சியில் நடிக்க வேண்டும். அதில் முகபாவனைகளும் காட்ட வேண்டும். பஞ்சாபி மொழி பேசி நடிக்க வேண்டும். அதை 2x வேகத்தில் படம்பிடித்து, பின் அதற்கு தகுந்தவாறு 2X வேகத்தைக் கூட்டி, அதை மேட்ச் செய்யும் விதமாக காட்சியை மறுபடி குளோஸப் நடிக்க வேண்டும். மொத்தம் 4 நாட்கள் காலை கயிற்றில் ஏறி, மாலை வரை நடித்து கொடுத்தார் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார் ஷங்கர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu