கோவையில் நூறு சதவீத பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து அதிகாரிகள் தகவல்..!

கோவையில் நூறு சதவீத பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து அதிகாரிகள் தகவல்..!
X

காந்திபுரம் பேருந்து நிலையம்

இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி நேற்று முதல் சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் தொமுச, ஐ.என்.டி.யூ.சி ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. கோவை மாவட்டத்திலும் தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பணிமணிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். அதேசமயம் உக்கடம், சாய்பாபாகாலணி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பணிமணிகளில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான பேருந்துகள் இயங்கி வருவதால், மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. போராட்டத்தில் ஈடுபடாத தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பாக பொது மக்களுக்கு இடையூறு இன்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கோவை மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று கோவை மண்டலத்தில் நூறு சதவீத பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!