தீபாவளி மது விற்பனை எவ்வளவு என்று தெரியவில்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
Coimbatore News, Coimbatore News Today- கோவையில் டைடல் பார்க் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் காந்திபுரம் செம்மொழி பூங்கா வாளகத்தில் அமைக்கப்பட இருக்கும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கின்றார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த இடங்களை கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆய்விற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஐந்து மற்றும் ஆறாம் தேதி கோவை மாவட்டம் வருகிறார் எனவும், ஐந்தாம் தேதி பிற்பகல் 12 மணிக்கு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார் என தெரிவித்தார். தகவல் தொழில் நுட்ப பூங்கா எட்டு தளங்களில் 2 லட்சத்து 94 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது எனவும், இதை திறந்து வைக்க இருப்பதாகவும்,திராவிட மாடல் அரசின் திட்டங்களை முதல்வர் கோவையில் இருந்து துவக்கி வைக்கிறார் எனவும் தெரிவித்தார். மேலும் வருகின்ற ஆறாம் தேதி செம்மொழி பூங்கா வளாகத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கின்றார் எனவும், ஏழு தளங்கள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த இரு அரசு நிகழ்ச்சிகளும் சிறப்பாக கோவையில் நடைபெற இருக்கிறது எனவும் தெரிவித்தார். தமிழக முதல்வர் அதிக முறை சுற்றுப் பயணம் செய்த மாவட்டமாக கோவை மாவட்டம் இருக்கிறது எனவும், இன்னும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கோவை மாவட்டத்தில் வழங்க முதல்வர் தயாராக இருக்கிறார் எனவும் தெரிவித்தார். தகவல் தொழில் நுட்ப பூங்காவில் எவ்வளவு நிறுவனங்கள் அமைய முடியுமோ, அதற்கேற்றபடி வேலை வாய்ப்புகள் அமையும் எனவும், இரு நிகழ்வுகளிலும் அரசு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை எவ்வளவு என்பதை கேட்டு சொல்கிறேன் எனவும், நேற்றும் இன்றும் அரசு விடுமுறை என்பதால் அதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறேன் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவையில் கட்சி தொடர்பாக நடந்த கூட்டங்களில் பேசாத கருத்துக்கள் பேசியது போல நாளிதழ்களில் செய்தி வெளியிடப்படுகிறது எனவும், என்ன நடந்ததோ அதை செய்தியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் எனவும் , சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்டால் பதில் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu