ஓட்டு போடுவதற்கு தேவையான ஆவணங்கள்: கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஓட்டு போடுவதற்கு தேவையான ஆவணங்கள்: கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
X

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி.

ஓட்டு போடுவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் விளக்கம் அளித்து உள்ளார்.

17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கோவை, பொள் ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், மின்வசதி, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது), ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை) மற்றும் வருமான வரி நிரந்தர எண் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

இதுதவிர வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), மத்திய-மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற, சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது). இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் வைத்து வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முடியாது. அதை வழிகாட்டுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். வாக்குச்சாவடிகளில் அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது/

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!