திருத்தணியில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு...
திருத்தணியில் வழக்கறிஞரை போலீஸார் தாக்கியதை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ஸ்ரீராமுலு (வயது 47). இவர், கடந்த வாரம் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அப்போது ஆஸ்பத்திரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் செல்வமணி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து வழக்கறிஞர் ஸ்ரீராமுலு, காவலர் செல்வமணி ஆகியோர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்த திருத்தணி காவல் லையத்தில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு வந்து வழக்கறிஞர் ஸ்ரீராமுலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த 13ஆம் தேதி திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற அசோசிஷியன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராமுலு வை தாக்கிய போலீசாரை கண்டித்து இதற்கு கண்டனம் தெரிவித்து மூன்று நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
மேலும், வழக்கறிஞர் ஸ்ரீராமுலை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்துறை கண்டித்து தமிழ்நாடு,புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருத்தணி-அரக்கோணம் சாலையில் 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது வழக்கறிஞர்கள் தெரிவிக்கையில் வழக்கறிஞர் ஸ்ரீ ராமுலுவை தாக்கிய போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுத்தி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்தணி-அரக்கோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.