ஆந்திர எல்லையோர மதுக்கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஆந்திர மாநிலம் மதுக்கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.;
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 10ம் தேதி முதல் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பால், மருந்தகம், மளிகைக்கடை ஆகியவற்றுக்கு மட்டும் ஒரு சில தளர்வுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.
இதனால் மதுபானத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள பங்களாமேடு, பரிஜ கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள ஆந்திர மாநில அரசு மதுக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுத்து வருகின்றன.
ஆந்திராவில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும், மதுக்கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்து விற்பனை செய்ய அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக மக்கள் அதிக அளவில் ஆந்திர மது கடைகளில் குவிந்த வண்ணம் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகின்றது.
எனவே, இரு மாநில எல்லைப் பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியும் எல்லை பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.