தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

திருத்தணி வனதுர்க்கை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Update: 2023-10-25 03:15 GMT

வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா 

திருத்தணியில் உள்ள வனதுர்க்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாழில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மடம் கிராமத்தில், வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். நிறைவு நாளில், தீமிதி விழா நடைபெறும்.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா கடந்த மாதம், 15ம் தேதி துவங்கியது. தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவு நாள் காலையில் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், குங்குமம், மஞ்சள், தேன், ஜவ்வாது உள்ளிட்ட நறுமண வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள்,  ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில்  ஒருவர் பின் ஒருவராக இறங்கி, தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில், திருத்தணி நகர வாசிகள் திரளாக பங்கேற்று சாமி தரி்சனம் செய்தனர்.

Tags:    

Similar News