வேலை தேடி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இருவர் கைது
சென்னைக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணின் பாலியல் வன்கொடுமைக்கு காரணமான இருவரை போலீசார் கைது செய்தனர்..
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 19 வயது பெண் கோயமுத்தூரில் உள்ள தனது பெற்றோரை சந்தித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தார். பின்னர் சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு தான் வேலை தேடி வந்து விவரத்தையும் கூறினார்.
மீண்டும் மைசூர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த அப்பெண்ணிடம் பழக்கம் இல்லாத ஒரு நபர் வேலை வாங்கி தருவதாக பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர், வேலை கிடைக்கும் வரை தனது அக்கா வீட்டில் இருக்குமாறு கூறி என்னை அருகம்பாக்கத்தில் உள்ள அவரின் தோழியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் இளம்பெண்ணை அடைத்து வைத்து அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு அவரது தோழியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து செல்போன் மூலம் காவல் துறையை தொடர்பு கொண்ட இளம்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பெண்ணின் இருப்பிடம் சென்று அவரை அதிரடியாக மீட்டனர்.
இதைத் தொடர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரும் அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் வேலூர் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்பதும், அவர் சென்னையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரது தோழியான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஷகிலா ( வயது 33). என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர். வேலை தேடி வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.