விஜயதசமியை முன்னிட்டு ஞான சரஸ்வதி ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி ஶ்ரீ வித்யாரம்ப ஞான மகா சரஸ்வதி ஆலயத்தில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே விஜயதசமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஶ்ரீ வித்யாரம்ப ஞான மகா சரஸ்வதி ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கை விரலை பிடித்து பச்சரிசியில் அ முதல் ஔ வரை எழுதி குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான விஜய தசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த நிகழ்வின் முன்னோட்டமாக கல்விக்கடவுளான சரஸ்வதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.
ஆனால் இந்திய அளவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. இதில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வித்யாரம்ப ஞான மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அரியப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்தில் உள்ள ஶ்ரீ வித்யாரம்ப ஞான மஹா சரஸ்வதி மூலவருக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப,தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர்.
விஜயதசமி நாளில் கல்வி,கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது குழந்தைகளின் கைபிடித்து பச்சரிசியில் அ முதல் ஔ வரை எழத கற்றுக்கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.