திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இருவருக்கு கத்திகுத்து: சாலை மறியல்

திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2024-04-24 03:43 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதல் காரணமாக இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த வானியஞ்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (வயது 40), வினோத் (வயது 38) இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ராமச்சந்திரன் தரப்பினருக்கும், வேலு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வினோதம், வேலுக்கு ஆதரவாக வெங்கடேசன், சிவா மற்றும் அவர் தரப்பில் இருப்பவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ராமச்சந்திரன்,வினோத் ஆகிய இருவரையும் வேலு தரப்பினர் கத்தியால் குத்தியுள்ளனர்

இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தனர். அங்குள்ளவர்கள் இருவரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கத்தியால் குத்தி தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி செங்குன்றம்- தாமரைப்பாக்கம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வெங்கல் காவல்துறை ஆய்வாளர் மாலா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவிக்கையில் இத்தகை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News