பவானி அம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் தங்க தேர் வெள்ளோட்டத்தில் அமைச்சர்கள் வடம் பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Update: 2024-09-14 09:15 GMT

தேர் வெள்ளோட்டத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், கிருஷ்ணசாமி ஆகியோர் உட்பட பலர் படத்தில்  உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்து கடந்த ஜூலை 12ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2022 - 23 சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பின்படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு தங்கத்தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 11 கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி, 379 செம்பு ஆகியவற்றை உருக்கி தங்கத்தேர் செய்யப்பட்டது. சுமார் 8.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.5 அடி உயரத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு பிரம்மன் தேரோட்டியாக தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் இன்று தொடங்கப்பட்டது.

உற்சவர் அலங்காரத்துடன் தங்கத்தேரில் வீற்றிருக்க அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை. சந்திரசேகர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆலய பிரகாரத்தை வலம் வந்த தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தபோது பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என பக்தி பரவசத்துடன் முழங்கி அம்மனை வழிபட்டனர். பௌர்ணமி நாட்களிலும், பக்தர்கள் வேண்டுதல் காலங்களில் இந்த தங்கத்தேர் ஓட்டம் நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற மானிய கோரிக்கையில் 5 கோவில்களுக்கு புதியதாக தங்க தேர் உருவாக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிட ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருக்கோவில் பயன்பாட்டில் இருந்த 68 தங்கத் தேர்களும், 55 வெள்ளித் தேர்களும் இருந்து வருவதாகவும், பக்தர்கள் பயன்பாட்டில் இல்லாமல் ஓடாமல் இருந்த 12 திருத்தேர்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் திருத்தேர், 10 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சமயபுரம் திருத்தேர், 8 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கோட்டை மாரியம்மன் திருத்தேர் ஆகியவை திமுக ஆட்சி அமைந்தபின் சீரமைக்கப்பட்டு ஓட்டிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும். ஓடாமல் நின்றிருந்த திருவாரூர் ஆழித்தேரை கலைஞர் சீர்படுத்தி ஓட்டியது போல, தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் ஓடாமல் இருந்த கண்டதேவி திருத்தேர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள இரு சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தேரை ஓட்ட வைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சரை சேரும் என்றார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு புதியதாக 5 தங்க திருத்தேர்கள் ஏற்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தற்போது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 8.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க திருத்தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடத்தி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தங்க திருத்தேர், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறினார்.

9 வெள்ளித் தேர் ஏற்படுத்தித் தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திருத்தணியில் வெள்ளித்தேர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 8 வெள்ளித்தேர்களும் விரைவில் வெள்ளோட்டம் விடப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

மேலும் வரலாற்றில் இல்லாத வகையில் நாளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஆலயங்களில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முன்பெல்லாம் ஆலய திருப்பணிகள் என்றால் ராஜராஜ சோழன் என்று கல்வெட்டுகள் இருந்தது போல, இனிவரும் சந்ததிக்கு ஆலய திருப்பணிகள், குடமுழுக்கு போன்றவற்றிற்கு தற்போதைய முதலமைச்சரின் ஆட்சி காலம் பொற்காலம் என்று அமையும் என தெரிவித்தார்.

மேலும் இறையன்பர்கள், ஆன்மீகவாதிகள் புகழும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தங்க தேர் வெள்ளோட்டத்துக்கு முன் அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது தமது மனைவிக்கு அவர் மாலை அணிவித்தார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் டி.கே. சந்திரசேகர்,சத்தியவேலு, இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட நிர்வாகிகள் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சீனிவாசன், சித்ரா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜமுனா அப்புன், கோவில் பரம்பரை அறங்காவலர் லோக மித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், மேலாளர் வெங்கடேசன், ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News