ஆரணி ஆற்றில் அத்துமீறி மணல் கொள்ளை: பாலம் கட்டுமான நிறுவனம் மீது புகார்

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டுமான நிறுவனம் அத்துமீறி மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக விவசாயிகள் புகார் கூறி வருகிறார்கள்.

Update: 2024-09-18 09:00 GMT

மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் குவியல் குவியலாக ஆரணி ஆற்றில் மணல் அள்ளி வைத்திருப்பது படத்தில்.

பெரியபாளையம் அருகே கீழ் மாளிகை பட்டு- தும்பாக்கம் இடையே ஆரணி ஆற்றின் மீது நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளை செய்து வரும் நிறுவனம் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தச்சூர் முதல் சித்தூர் வரை அதிவேக விரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் மாளிகை பட்டு தும்பாக்கம் கிராம பகுதியில் ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடக்க அதிவேக விரைவு சாலையை இணைக்கும் விதமாக ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் மேம்பாலம் பணிகளை செய்து வரும் தனியார் நிறுவனம் மணலுக்கு பதிலாக எம் சாண்ட் எனப்படும் மணல் போன்ற பொருளால் பணிகளை செய்ய உத்தரவுகள் இருக்கும் நிலையில்.இந்த உத்தரவை மீறி இந்த மேம்பாலம் பணிகளை செய்து வரும் நிறுவனம் அத்துமீறி அனுமதியின்றி ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஹிட்டாச்சி இயந்திரங்களை வைத்து நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணலை நிரப்பி ஏற்றி சென்று பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரணி ஆற்றை ஒட்டி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் சிலர் தெரிவிக்கையில் இந்த ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி நூற்றுக்கணக்கான விளை நிலங்களில் விவசாயிகளான நாங்கள் கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள், நிலக்கடலை, சாமந்தி,மல்லி,ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தற்போது இரவு நேரங்களில் மேம்பாலம் கட்டும் நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை அப்பகுதி விவசாயிகளான நாங்கள் தட்டி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தாங்கள் கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து விவசாயத்திற்காக ஆரணி ஆற்றினை ஒட்டி அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இந்த ஆற்றின் நீரை நம்பி எங்களது முன்னோர்களும் தொய்வின்றி முப்போகம் விவசாயம் செய்து வந்தனர்.

இந்தத் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதோடு விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து தவித்து வருகிறோம். சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் நடவு செய்த பயிர்கள் கருகி செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது,.இதனை தடுக்க வேண்டிய காவல்துறையும், வருவாய்த் துறையினரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

எனவே இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் இந்த நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News