லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் சாலையில் சரிவு: போக்குவரத்து கடும் பாதிப்பு
தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதித்தது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்காக காஞ்சிபுரத்தில் இருந்து பெரியபாளையத்திற்கு லாரிகள் மூலம் இரும்பு ராட்சத பீம்கள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.
ராட்சத பீம்கள் ஏற்றிக்கொண்டு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகே திடீரென ராட்சத பீம்களுக்கு இருபக்கமும் கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கிலிகள் அறுந்தது. இதனால் இரும்பு சென்டர் பீம்கள் அனைத்தும் லாரியில் இருந்து சரிந்து சாலையில் விழுந்தன.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்நேரத்தில் சாலையில் எந்த ஒரு வாகனம் அதனருகே செல்லாததால் வாகன ஓட்டிகள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன்ர். இதையடுத்து, அப்பகுதியில் சென்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் போராடி ராட்சத பீம்களை. ஜே.சி.பி உதவியுடன் மீண்டும் லாரியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவ்வழியே போக்குவரத்து வழக்கம்போல தொடங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.