போக்குவரத்து பிரச்சினை: பெரியபாளையத்திற்கு புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை
பெரியபாளையத்திற்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் புறவழிச் சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.;
பெரியபாளையத்தில் பல்வேறு பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்டுள்ள ராட்சத பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒருவழி பாதையாக மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளதால் புறவழிச் சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் சாலையில் எண்ணெய் நிறுவன குழாய் பதிப்பதற்காகவும், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகளில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மூடப்படாததால் ஒருவழி பாதை போல ஒரு புறத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிர்திசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் மற்றொரு பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக பெரியபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெரியபாளையம் வழியே ஆந்திர மாநிலம் செல்லும் வாகனங்களும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சுமார் 2.கிமீ தூரம் அணிவகுத்து நிற்கின்றன. பெரியபாளையம் ஆரணியாற்றின் மேம்பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. ஆடி மாதம் முடிந்து தற்போது ஆவணி மாதம் நடந்து வருவதால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகி வருகின்றன .
பெரியபாளையம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச் சாலையை அமைக்க கிராம மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.