திருவள்ளூர் ரயிலில் மதுபானம் கடத்தல்: இளைஞர் பிடிபட்டார்

திருவள்ளூர் ரயிலில் மதுபானங்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-02 07:26 GMT

பிடிபட்ட மதுபாட்டில்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வருகிற 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வணிக வளாகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ரயில் மூலமாக தமிழகத்திற்கு மதுபாட்டிலை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.

எனவே இதனை கண்காணிக்க ரயில்வே இருப்பு பாதை காவல்துறை இயக்குனரான சைலேந்திரபாபு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். இவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார்  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரை சேர்ந்த 33 வயதான வெங்கடேசன் என்பவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 28 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News