திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்
திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. சித்திரை பிரமோற்சவ விழாவின் 7-ஆம் நாளான தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமான திருஎவ்வளூர் என அழைக்கப்படும் திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தின் 7-ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்ஸவம் தொடங்கியது. 48 அடி உயரமும் 21 அடி அகலமும் 75 டன் எடை கொண்ட இந்த தேர் கொரோனா பரவலுக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூரில் நடந்த தேர் விபத்தின் எதிரொலியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.தேர் செல்லும் 4 மாட வீதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேர்பவனி நடைபெற்றது.
திருமங்கையாழ்வார், திருமழிசை பிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாகவும், வடலூர் ராமலிங்க அடிகளார் 5 பாசுரங்கள பாடி இருப்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது சித்திரை பிரமோற்சவத்தின் ஒரு பகுதியாக தற்போது தேரோட்டம் நடைபெற்று வருகிறது.நோய் தீர்க்கும் தலமாக பார்க்கப்படுவதால் சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கையாக தேர் சக்கரத்தில் கொட்டி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.