சிறுவாபுரி முருகன் கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி

சிறுவாபுரி முருகன் கோவில் முருகன், வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-09-03 12:10 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் நடந்த முருகன் வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் தொடர்ந்து 6.செவ்வாய்க்கிழமை நாட்களில் இக்கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை, ரியல் எஸ்டேட், வீடு கட்டுதல், மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பெண்கள் ஊஞ்சல் கட்டி வடுபாடு நடத்தினால் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இக்கோவிலுக்கு புறநகர் மட்டுமில்லாமல் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று 11ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானுக்கும் வள்ளி தேவிக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வள்ளி தேவிக்கு ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடந்தேறியது.

திருக்கல்யாணத்தின் நிறைவாக முருகப்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து முருகப்பெருமான் ஆறு முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News