மேற்கூரை இடிந்து கீழே விழுந்ததில் மூன்று பேர் காயம்
திருவள்ளூர் அருகே வங்கியின் மேற்கூரை மேலே விழுந்ததால் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.;
இடிந்த விழுந்த மேற்கூரை பகுதி
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலையம் அருகில் இந்தியன் வங்கி உள்ளது.இந்த இந்தியன் வங்கியில் மப்பேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த வங்கியில் திரளான வாடிக்கையாளர்கள் இருந்தனர். காலை 11 மணியளவில் இந்த வங்கியின் மேற்கூறையின் ஒரு பகுதி பெயர்ந்து அதிலிருந்து சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்தது. அப்போது வங்கிக்கு வந்து இருந்த காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன வளப்புரம் குளக்கரை தெருவை சேர்ந்த ஜோஸ்பின் ( வயது 64), மப்பேடு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மணி ( வயது 60) மற்றும் வயலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பார்வதி (வயது65) ஆகிய மூன்று பேரும் மீதும் விழுந்தது.
மற்ற வாடிக்கையாளர்கள் சற்று தூரத்தில் இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்த மூன்று பேரை அங்கிருந்து வாடிக்கையாளர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் உடனடியாக இருந்து விழுந்த மேற்கூறையின் சிமெண்ட் பூச்சிகளை அகற்றினர். இதன் காரணமாக வங்கியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.