புழல் ஏரி நீர் இருப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு
புழல் ஏரியில் நீர் இருப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.
பருவ மழைக்கால வழிகாட்டு நெறிமுறையின் படி புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது முடிவு செய்யப்படும். கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கடந்த காலங்களைப் போல பாதிப்பு ஏற்படாது என புழல் ஏரியில் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில் கூறினார்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 2661 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு 190 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் சூழலில், சென்னை குடிநீருக்காக ஏரியிலிருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் புழல் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புழல் ஏரியில் உள்ள தற்போதைய நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கரைகளின் உறுதித் தன்மை, உபரி நீர் வெளியேற்றப்படும் ஷட்டரின் பயன்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை ஆய்வு செய்து வருவதாகவும், சென்னை குடிநீர் ஏரிகள் அனைத்தும் 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் புழல் ஏரியில் 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், பருவ மழைக் காலங்களில் ஏரிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், எல்நினோ ஆண்டு என்பதால் மழைக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து, புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் முன்னுரிமை அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கடந்த காலங்களில் ஏற்பட்டது போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்தார். மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இருவகையான பாதிப்புகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் மழைக்குப் பின்னர் தேங்கக் கூடிய நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அப்போது தெரிவித்தார்.