ஊத்துக்கோட்டை அருகே அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் மேம்பாலத்திற்கு ஆபத்து

ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலத்தின் மீது அதிக பாரம் ஏற்றி செல்லும் மண் லாரிகளால் மேம்பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-03-10 08:45 GMT

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பாலம் வழியாக செல்லும் அதிக பாரம் ஏற்றிய லாரிகள்.

ஊத்துக்கோட்டை அருகே செம்மண் குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றி மேம்பாலம் மீது செல்லும் லாரிகளால் மேம்பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கலவை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அதிலிவாக்கம் கிராம அருகே கிருஷ்ணா கால்வாய் செல்கிறது. இந்த கிராம மக்கள் கிறக்கம்பாக்கம், திருநின்றவூர், கலவை, ஊத்துக்கோட்டை, ஆவடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர ஏதுவாக இந்த கிருஷ்ணா கால்வாய் மீது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது.


இந்த மேம்பாலம் வழியாக மேற்கொண்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று தாங்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மேம்பாலமானது தற்போது மிகவும் பலவீனமடைந்து ஆங்காங்கு சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி பழுதடைந்த தோற்றத்தில் காணப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து கலவை ஊராட்சி ஆளப்பாக்கம் பகுதியில் செம்மண் குவாரி செயல் பட்டு வருகிறது. இந்தக் குவாரியில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 லாரிகள் வரை அதிக பாரம் கொண்ட 12 சக்கர லாரிகள் சுமார் 40 முதல் 50 டன் வரையில் செம்மண் ஏற்றிக்கொண்டு இந்த மேம்பாலத்தின் மீது சென்று வருகின்றன.

அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் மேம்பாலம் எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடும் வாய்ப்புள்ளது. ஆபத்து விளைவிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்து பாலத்தின் நலனை கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Similar News