பெண்ணை கட்டிப்போட்டு, 28 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் கொள்ளை
Women Tied Up- பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி, 28 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
Women Tied Up- பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி 28 பவுன் நகை, 2.5 லட்சம் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற நிலையில், காயமடைந்த பெண் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக்கில் தப்பிச் சென்ற முகமூடி மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். (30) இவருக்கு திருமணமாகி மனைவி மாலதி, இரண்டு மகள்கள் உள்ளனர். காய்கறி வியாபாரியான இவர் தினந்தோறும் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு, சென்னை கொடுங்கையூரில் சென்று விற்பனை செய்து வருகிறார். உதயகுமார் வழக்கம் போல, காய்கறி வியாபாரத்திற்கு சென்னைக்கு நிமித்தமாக சென்றுள்ளார். இவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நன்பகலில் இவர் தனியாக இருப்பதை அறிந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து மாலதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, நகை பணம் இருக்கும் பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டி உள்ளார். வீட்டில் எந்த பொருளும் இல்லை என மாலதி மறுக்கவே, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மாலதியை அரிவாளால் வெட்டி பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டி உள்ளார். தொடர்ந்து மாலதியின் கைகளை கட்டிப் போட்டு, வாயையும் துணியால் கட்டியுள்ளார். சிறிது நேரத்தில் பீரோ சாவி இருக்கும் இடத்தை மாலதி கூறியவுடன் மர்ம நபர் பீரோவில் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு மீண்டும் வெளிப்புறம் பூட்டிவிட்டு தப்பிச் சென்றார். சுதாரித்த மாலதி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பைக்கில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து மாலதியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து ஆரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கை, கால், உடல் என ஐந்து இடங்களில் மாலதியை வெட்டிய மர்ம நபர், வீட்டில் இருந்து 28 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக நகைகளை அணிந்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர் கைவரிசையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்த மாலதிக்கு தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆரணி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டப் பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2