வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க காணாமல் போன டிரைவர் மனைவி புகார்
சபரிமலையில் தனது கணவர் காணாமல் போனதால் அவரது மனைவி வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
காணாமல் போன கணவரை மீட்டுக் கொடுக்குமாறு மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் களாம்பாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜா ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
பேரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர்உசேன் சொந்தமாக வேன் வாடகைக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார். ராஜாவை கடந்த அக்டோபர் மாதம் 16- ஆம் தேதி ஜாகீர் உசேன், ராஜா ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரைக்கு பக்தர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் சபரிமலை அருகே நிலக்கல் என்ற இடத்தில் ராஜா திடீரென காணாமல் போனதாக கடந்த அக்கோடபர் மாதம்18-ஆம் தேதி வாகன உரிமையாளர் ஜாகீர் உசேன் போன் மூலம் ராஜாவின் மனைவி சுஜாதாவிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சுஜாதா கேரளா மாநிலம் நிலக்கல் சென்று பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.தன் கணவர் ராஜா கிடைக்காததால் வாகன உரிமையாளர் ஜாகீர் உசேன் நிலக்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இதனையடுத்து கேரளா போலீசார் திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் ராஜாவின் வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை செய்துள்ளனர்.இது குறித்து திருவாலங்காடு போலீசிலும் தகவல் தெரிவித்துவிட்டு கேரளா போலீசார் சென்றுள்ளார்.
மேலும் இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த அக்கோடபர் மாதம் 28-ஆம் தேதி சுஜாதா, புகார் கொடுத்துள்ளார். அதில் திருவாலங்காடு போலீசாரிடம் புகார் கொடுத்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன ராஜாவிடம் இருந்து வாகன உரிமையாளர் ஜாகீர் உசேனுக்கு கடந்த-18 தேதி மதியம் போன் வந்துள்ளது. அப்பொழுது அவரை 4 பேர் சேர்ந்து தாக்கி உள்ளதாகவும் தான் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் இப்பொழுது நான் எங்கே இருக்கிறேன் என்பது தெரியவில்லை என்று போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களாகியும், காணாமல் போன என் கணவரை பற்றி காவல் துறை தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், எனவே தன் கணவரை ஆக்டிங் டிரைவராக வேலைக்கு அழைத்துச் சென்ற ஜாகீர் உசேனை மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக எனவே அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ராஜாவின் மனைவி சுஜாதா மற்றும் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.