திருவள்ளூரில் பொதுப்பணித்துறை தோண்டிய குழியை மூடிய பள்ளி நிர்வாகம்
திருவள்ளூரில் பொதுப்பணித்துறை தோண்டிய குழியை தனியார் பள்ளி நிர்வாகம் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
தனியார் பள்ளி நிர்வாகம் தோண்டிய குழி.
பொதுப்பணித்துறையால் தோண்டப்பட்ட சாலையை பள்ளி நிர்வாகம் சார்பில் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நெருக்கடியான பழைய பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் ரூ. 45 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூர் ஐ.சி.எம்.ஆர். அருகே புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் திட்டம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித ஆரம்ப பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் பகுதி அருகே பிரபல நிகேதன் பாடசாலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அப்பள்ளிக்கு செல்வதற்காக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பேருந்து நிலைய பணிகள் தொடங்கி இருப்பதால் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் பள்ளிக்கு செல்லும் வழியாக பயன்படுத்தி வந்த இடத்தில் பொதுப்பணித்துறை குறுக்கே பள்ளம் தோண்டியது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
எனவே பள்ளிக்கு செல்ல மாற்று சாலை அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பள்ளிக்கு மாற்று சாலை அமைத்து கொடுத்த பின்னர் தற்போதைய சாலை அகற்றப்படும் என உறுதி அளித்தனர்
இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் தோண்டப்பட்ட சாலையை 30 நிமிடத்திற்குள்ளாக பள்ளி நிர்வாகம் ஜே.சி.பி. உதவியுடன் மூடிய நிகழ்வும் அரங்கேறி உள்ளது.இந்த சம்பவத்தினால் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சிறிது நேரம் பதட்ட நிலை ஏற்பட்டது.