மதுபானக் கடையை அகற்ற கோரி அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஆரணியில் பஜார் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சியின் 7-வது வார்டில் கம்மாள தெரு உள்ளது.இங்கு அரசு மதுபான கடை எண்:9137 இயங்கி வருகிறது.
இந்த கடையின் அருகே காணியம்மன் கோவில், விநாயகர் கோவில், தனியார் திருமண மண்டபம்,பஜார் வீதி உள்ளிட்டவை அருகாமையிலே உள்ளது. இந்நிலையில்,இந்த தெரு வழியாக பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் சென்று வர மிகவும் அவதியாகவும்,அச்சுறுத்தலாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,வியாபாரிகள் உள்ளிட்டோர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அரசு மதுபான மாவட்ட மேலாளருக்கு புகார் மனுக்களை அனுப்பியும் பயனில்லை.
இந்நிலையில், ஆரணி பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிமன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி இந்த மதுபான கடையை பொதுமக்களின் நலன் கருதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு மாற்றித் தருமாறு அரசு மதுபான திருவள்ளூர் மேற்கு மாவட்ட மேலாளருக்கு கடந்த 12-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டரும், அரசு மதுபான திருவள்ளூர் மேற்கு மாவட்ட மேலாளருமான ஜெயக்குமார் அதிகாரிகளுடன் இந்த மதுபான கடையை ஆய்வு செய்ய வந்தார். இச்செய்தி இப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் அரசு மதுபான மாவட்ட மேலாளர் ஜெயக்குமாரை முற்றுகையிட்டு அரசு மதுபான கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ஜெயக்குமார் காரில் ஏற முடியாமல் அவதிக்கு உள்ளானார்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி, ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேல் அதிகாரிகளிடம் பேசி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜெயக்குமார் உறுதி கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.