விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் கைது
விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;
புழல் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியான வழக்கு. கழிவு நீர் தொட்டியில் மயங்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் பகுதியில் வசித்து நிர்மலா. உடல்நலக் குறைவால் கணவர் இறந்த நிலையில் 2 அடுக்கு மாடி வீட்டில் உள்ள வீடுகளை இவர் வாடகைக்கு விட்டு வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மொண்டியம்மன் நகரை சேர்ந்த கணேசன் என்பவரை அணுகியுள்ளார். கணேசன் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய 2 தொழிலாளர்களை அழைத்து கொண்டு மூவரும் நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நேற்று நிர்மலா வீட்டில் இருந்த கழிவு நீர் தொட்டி மூடியை திறந்து சுத்தம் செய்வதற்காக பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது திடீரென இருவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். நீண்ட நேரமாக வெளியே வராததை கண்டு அங்கிருந்த கணேசன் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலையில் கிடந்த 2 தொழிலாளர்களை கயிறு கட்டி சடலமாக மீட்டனர். இதனையடுத்து இருவரது சடலங்களை கைப்பற்றிய புழல் போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் ஐபிசி 304 (ii), கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் நிர்மலாவை கைது செய்தனர். தொடர்ந்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அங்கு நிர்மலா பிணையில் விடுவிக்கப்பட்டார்.