விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
திருவள்ளூரில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் நாசர், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 2024 கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10 தேதி திருவள்ளூர் மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபடி, ஆக்கி, பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சா.மு.நாசர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக நிகழ்ச்சிக்கு வந்ததால் அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசுகையில் மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதாது என உடல் அளவில் மனதளவில் உறுதியாக இருந்தால் மட்டும்தான் மாணவர்கள் எதையும் சாதித்து காட்ட முடியும் என்றும் எனவே விளையாட்டுகளில் கலந்து கொண்டு மாவட்டம் அளவில் மட்டுமல்லாமல் மாநிலங்கள் அளவிலும் விளையாடி தமிழகத்திற்கும், வாய்ந்த ஊருக்கும், பெட்ரோலுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அவர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆவடி மேயர் உதயகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன்,திருவள்ளூர் ஆர்.டி.ஓ கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.