கொரோனா விதி மீறல்: பிரபல ஜவுளிக்கடைகளில் அபராதம் ரூ.45ஆயிரம் வசூல்
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய ஜவுளிக் கடைகளில் நகராட்சி ஆணையர் ஆய்வு; அரசு விதிமுறைகளை பின்பற்றாததால் 11கடைகளுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பெரிய ஜவுளிக்கடைகளை திறக்கக் கூடாது என்றும் அறிவித்திருந்த நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் விதிகளை மீறி திறந்து வைக்கப்பட்டுள்ள ஏ.சி வசதியுடன் கூடிய பெரிய துணிக்கடைகளில், நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் ஊழியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு சென்ற எந்த கடைகளில் முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் சந்தானம், பிரபல ஜவுளிக்கடை நிர்வாகிகளிடம் கடையின் தன்மைக்கேற்ப 2ஆயிரம் முதல் 5ஆயிரம் வரை அபராதம் விதித்தார். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடை நிர்வாகிகளுக்கும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார்.
மீண்டும் ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற விதிமீறல்கள் இருந்தால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தார். மொத்தம், 11 கடைகளை ஆய்வு செய்து 45 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் சந்தானம் தெரிவித்தார்.