மாவட்ட ஆட்சியரை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் இளநிலை ஆசிரியர்கள் என சுமார் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து விவாதிக்கப்பட்டு குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு ஆலோசனையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை நீ வா போ என ஒருமையில் பேசியதாகவும் உனக்கு அவ்வளவு தான் போன்ற கடுமையான வார்த்தைகளை மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தி என்னை ஒன்றும் செய்ய முடியாது ஜாக்டோ ஜியோ அமைப்பிலாவது கூறுங்கள் அமைச்சரிடம் ஆவது கூறுங்கள் என்ன நடக்கப்போகிறது. அதிகபட்சமாக என்னை மாற்றம் செய்வார்கள் நான் மாறுதல் பெற தயாராக உள்ளேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கலந்த ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கரை கண்டிக்கும் விதமாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆசிரியர்கள் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை கருப்பு பேட்ச் அணிந்து ஆசிரியர் பணியை மேற்கொள்ளதாகவும் பின்னர் அடுத்த கட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூறும் போது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் ஒரு சதவீதம் மட்டுமே குறைவு எனவும் அது குறித்து ஆலோசனை வழங்காமல் ஆசிரியர்களை அவமதிக்கும் விதமாக ஆட்சியர் நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது எனவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முடிந்தால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையை தேர்வு செய்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி நூறு சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் எனவும் சவால் விடுத்தார்.