உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
திருக்கண்டலம் கிராமத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.;
உடல் உறுப்பு தானம் செய்த உமா சந்திரன்.
பெரியபாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான உமாச்சந்திரன் (62). உமாச்சந்திரன் கடந்த ஓராண்டிற்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தில் அவ்வப்போது உமாச்சந்திரனுக்கு தலைவலி உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். விபத்தில் சிக்கியதால் உமாச்சந்திரன் தமது மறைவிற்கு பிறகு உடலில் உள்ள விலைமதிப்பற்ற பாகங்கள் மற்றவர்களுக்கு பயன்பெறும் வகையில் உடலுறுப்பு தானத்திற்கு பதிவு செய்திருந்தார்.
கடந்த 4ஆம் தேதி மீண்டும் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு விவசாயி உமாச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்ததால் இன்று அதிகாலை சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தொடர்ந்து இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து திருக்கண்டலம் கிராமத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விவசாயி உமாச்சந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.