தந்தை இறப்பில் சந்தேகம்: மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகன் மனு
தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகன் புகார் மனு அளித்துள்ளார்.;
காட்டுப்பன்றி தொல்லையால் வயலை சுற்றி வைக்கப்பட்டுள்ள மின் கம்பியில் தந்தை சிக்கிக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகன் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து முத்துக்குமாரின் மகன் ஞானசேகர் கனகம்மாச்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தோமூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் விறகு வெட்ட சென்றுள்ளார்.அப்போது அங்கு விவசாய நிலம் அருகே அழுகிய துர்நாற்றம் வீசும் நிலையில் சடலம் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தெரிவித்ததையடுத்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் அது காணாமல் போன முத்துக்குமாரின் உடல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் முத்துக்குமாரின் மரணமானது இயற்கை மரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி அதே பகுதி சார்ந்த நண்பர்களுடன் அருகில் உள்ள வயல்வெளிக்கு அருகே சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு இருந்து முத்துக்குமார்,அதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் ஜனவரி மாதம் பத்தாம் தேதி இரவு 12 மணிவரை வாட்ஸ் அப் ஆன்லைனில் முத்துக்குமார் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் உடல் மீட்கப்பட்ட இடம் அருகே வயல்வெளி இருந்ததும்.அதில் பயிரிட்டு இருப்பதால் காட்டு பன்றிகள் நாசம் செய்வதை தடுக்கும் விதமாக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் மின்சார வேலி வைத்திருந்த ராமகிருஷ்ணன், முரளி, பாலு, சம்பத், மற்றும் பெருமாள் நிலம் அருகே முத்துக்குமாரின் சடலம் இருந்துள்ளது. இதனால் தனது தந்தையின் மரணம் இயற்கையான மரணம் இல்லை என்றும் தந்தையின் பிரேத பரிசோதனை சான்றிதழ்களை கொடுப்பதில் காவல்துறையினர் கால தாமதம் காட்டியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
குற்றவாளியை காப்பாற்ற கனகம்மாள் சத்திரம், இன்ஸ்பெக்டர் முயற்சிப்பதாக முத்துக்குமாரின் மகன் ஞானசேகர்,திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் புகார் மனு அளித்துள்ளார். தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டுவதாகவும், உண்மை குற்றவாளியை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட எஸ் பி விரைவில் விசாரித்து உரிய நடவடிக்கைஎடுப்பதாக தெரிவித்து உள்ளார்.