கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நிறுத்தம்
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்ததால் கொசத்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீர நிறுத்தப்பட்டது.;
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்ததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் மிக்ஜாம் புயல் மற்றும் பருவமழை காரணமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழை நீரை கால்வாய் மூலம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி வரை உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 3064 மி்ல்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை 6:00 மணி நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் 34.73 அடியாக உள்ளது. மழை நின்று போனதாலும் ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதாலும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர் வரத்து குறைந்ததாலும் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.