தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
திருவள்ளூர் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தது.
திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள்.துரத்திக் சென்று கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானை காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மூன்று வயதுடைய பெண் புள்ளி மான் தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றது.
இதனை கவனித்த அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்ததால் மானின் பின்பக்க கால் பலத்த காயமடைந்துள்ளது, இதனைபார்த்த அருகில் உள்ள பொதுமக்கள் தெருநாய்களை துரத்திவிட்டு திருவாலங்காடு காவல்துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் காயம்பட்டிருந்த புள்ளி மானை மீட்டு அருகில் உள்ள திருவாலங்காடு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த வாரம் இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள காப்பு காடு பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி வந்த புள்ளி மான் ஊருக்குள் புகுந்தது.
இதனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக புள்ளிமான் உயிரிழந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கையில் கோடை வெயில் என்பதால் காட்டுக்குள் தண்ணீர் இல்லாமல் இதுபோன்று பிராணிகள் ஊருக்குள் வருவதால் நாய்கள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் காடுகளில் தொட்டிகளை கட்டி அதில் தண்ணீர் இருப்பு இருக்கும்படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.