பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு 108 பெண்கள் திருவிளக்கு பூஜை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் புகழ் பெற்ற சுயம்புவாக எழுந்தருளி அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆடி மாதம் தொடர்ந்து 14.வார காலம் வெகு விமர்சையாகவும் கோலாகலமாக நடைபெறும். இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாது ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து இரண்டு நாட்கள் தங்குவார்கள்.
சிறுவர்கள், பெண்கள்,பெரியவர்கள் வரை மொட்டை அடித்து பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கல் வைத்து, அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் படையல் இட்டு ஆடு, கோழி என பலியிட்டு உடல் முழுவதும் வேப்பிலை ஆடையை அணிந்து கொண்டு கையில் தேங்காயை ஏந்தி கோவில் சுற்றி வளம் வந்து சக்தி மண்டபத்தில் நெய் விளக்கு படையல் வைத்தும், ரூபாய் 100 மற்றும் பொது தரிசனத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர்,தேன், பன்னீர், ஜவ்வாது, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வண்ணமலர்கலாலும், திரு ஆவணங்களாலும், அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் வைத்து கோவில் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
ஆலயத்திற்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பர அறங்காவலர் அஞ்சன் லோகமித்திரா தலைமையில் திருக்கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.