திருவள்ளூர் அருகே தாயை கொன்று வீட்டிலேயே புதைக்க முயற்சித்த மகன் கைது
திருவள்ளூர் அருகே தாயை கொன்று வீட்டிலேயே புதைக்க முயற்சித்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 48). இவர் தனது கணவர் ஆனந்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த தம்பதியருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் ராமதாசுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். அதே போல, ஒரே மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் மல்லிகா கணவர் ஆனந்தன் இளைய மகன் ஜெயபாலன் மூன்று பேர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
மல்லிகாவின் கணவரும், வேலையின் பெயரில் வெளியூர் சென்றிருந்த நிலையில் ஜெயபால் வேலைக்கு எதுவும் செல்லாமல், ஊரைச் சுற்றி வந்துள்ளார். இது குறித்து தாய் மல்லிகா, இளைய மகனை கூப்பிட்டு . வேலைக்கு போகாமல், இதுபோல் ஊரை சுற்றிவந்தால் உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று அறிவுரை சொன்னதாக கூறப்படுகிறது. ஒரு நிலையில் , தாய் மகனுக்கும் பேச்சு முற்றிய நிலையில் கோபத்திற்கு ஆளான ஜெயபால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் மல்லிகா கழுத்துப்பகுதியில் பலமாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மல்லிகா துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து போலீசாருக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் தொடர்ந்து, தனது தாயின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், ஜெயபால் யோசித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், உயிரிழந்த மல்லிகாவை, வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்க, ஜெயபால் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளிலும் ஜெயபால் ஈடுபட்டு வந்த நிலையில், இரவு நேரத்தில் அவர் சோர்வு அடைந்ததாக தெரிகிறது. அதிகாலை மீண்டும் ஜெயபால், திரும்பி குழி தோண்ட தொடங்கினார்.
அந்த நேரத்தில் தன் தாயை பார்க்க வந்த மூத்த மகன் ராமதாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். சகோதரரின் செயலைக் கண்ட ராமதாஸிடம், தாயை கொலை செய்து விட்டு, வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்கப் போவதாகவும் ஜெயபால் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன் ராமதாஸ், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயைக் கொன்ற ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.